Friday, January 30, 2009

எழுகிறான் மாவீரன் முத்துக்குமார் பல்லாயிரம் இளைஞர்களாக........


மாவீரன் முத்துக்குமாரின் உடல் சென்னையிலுள்ள கொளத்தூர் வியாபாரிகள் சங்கக் கட்டிடத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அவர் நேற்றைய தினம் தன்னைத் தீக்கிரையாக்கிக் கொள்வதற்கு முன்னால் நமக்களித்த, அவரது மரணத்தை விஞ்சும் இலக்கியத்தை உயர்த்திப்பிடித்தபடியே அங்கு திரண்டிருக்கும், எந்த ஒரு ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சியினையும் சார்ந்திருக்க விரும்பாத உணர்வாளர்களின் கட்டுப்பாட்டில் அவரது உடல் இருக்கிறது.

 

மத்தியில் ஆளும் காங்கிரசு, பார்ப்பன பாசிச ஜெயா கும்பல் இன்னபிற ஓட்டுப்பொறுக்கிகள் அந்தப் பக்கம் இன்னும் தலைவைத்தும் படுக்கவில்லை. திமுகவின் தலைமை வழக்கம்போல ஸ்டாலினைவிட்டு இரண்டு லட்சம் நிதியுதவியை வீரன் முத்துக்குமாரின் குடும்பத்தாருக்கு அறிவித்துவிட்டு, அப்பகுதியைச் சார்ந்த (புரசைவாக்கம்) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவை மட்டும் அஞ்சலி செலுத்த அனுப்பிவைத்தது. ஆனால், அங்கு திரண்டிருந்த உணர்வாளர்கள் கற்களையும் செருப்புகளையும் வீசியெறித்து வி.எஸ்.பாபுவை விரட்டியடித்துள்ளார்கள்.

 

இதிலிருந்து தியாகி முத்துக்குமாரின் மரணத்துக்கு முந்தைய வேண்டுகோள்களின் கூர்மையினை மொத்தமாக உள்வாங்கிக் கொண்ட உணர்ச்சிகரமான சூழல் நிலவுவதை நாம் உணரமுடிகிறது. அதுதான் அவரது தியாகத்துக்கு நாம் அளிக்கும் குறைந்த பட்ச மரியாதையுமாகும்.

 

நேற்றுவரை புலியரசியலில் கூவிக்கொண்டிருந்த வைக்கோ, பழ. நெடுமாறன் வகையறாக்களும் அங்கே தவறாமல் ஆஜராகியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அங்கு வந்த நோக்கம் அங்குள்ள இளைஞர்களால் எள்ளி நகையாடப்பட்டு அவமதிக்கப்பட்டிருக்கிறது.

 

எப்படியாவது இந்தப் பிரச்சினையை சுமூகமாக முடித்துவிடவேண்டிய நிலையில், ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளாக அங்கு வந்து, இன்றைக்குள் உடலை, அவசர அவசரமாக அடக்கம் செய்யத் துடிக்கிறார்கள் வைக்கோ வகையறாக்கள். வைக்கோ வழக்கமான மேடைகளைப்போல் நினைத்து அங்கே மேடையேறியவுடன், “பாசிச ஜெயாவுடன் கூட்டணிவைத்துக்கொண்டு.... இத்தனைக்கும் காரணமானவனே நீதாண்டா எறங்குடா கீழே....என்று அவரின் முகத்துக்கு நேரே உணர்ச்சிகரமாகக் குரல் கொடுத்தார்கள் சில இளைஞர்கள்.

 

இருப்பினும் அதனைக் கண்டுகொள்ளாததுபோல் தனது பேச்சை, நாடகத்தை, வசனத்தை வைக்கோ தொடந்து கொண்டேதான் இருந்திருக்கிறார். பழ. நெடுமாறனின் கதையும் அப்படிப்பட்டதே. இறுதியாக முத்துக்குமாரின் உடல் இன்றைக்குள் அடக்கம் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாக உணர்வாளர்கள் நின்று கொண்டிருப்பதால் அவரது உடலை அடக்கம் செய்யமுடியாத சூழல் உருவாகியுள்ளது.

 

நாளை மாலை மூன்று மணியளவில் இறுதி ஊர்வலம் நடக்கலாம் என்கிற தகவலை வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வெள்ளையன் மேடையில் அறிவித்திருக்கிறார். அங்கு திரண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழலே நீடித்துவருகிறது.

 

என்னுடைய உடலை போலீசிடமிருந்து கைப்பற்றி, அதையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துங்கள்....என்கிற மாவீரன் முத்துக்குமாரின் வேண்டுகோள் மெய்யாகட்டும். ஈழ மக்களின் மீதான இந்திய-சிங்கள பாசிச அரசுகளின் இன அழிப்பின் மீதான உறுதியான தாக்குதலை நாம் தமிழகத்திலிருந்து தொடுப்போம்.

 

மாவீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்!


No comments: