Wednesday, September 10, 2008

'அற்ப' இசுலாமும் 'பயங்கரவாத' இந்த்துத்துவமும் ஒன்றா?


மூடநம்பிக்கை, பெண்ணடிமைத்தனம், தற்குறிப்புத்தி என்று நீளும் அனைத்து மத பழமைவாதங்களும், சமூக அக்கறையை முற்றாக ஒழிக்கும் சொரனையற்ற அற்பத்தனங்களும் மட்டுமே கொண்டிருக்கும் மதங்களில் நிச்சயம் இவர்கள் சொல்லும் இசுலாத்துக்கும் பெரிய இடமுண்டு. இதுபோன்ற அற்பத்தனங்கள் கண்டிக்கப்படவேண்டியவையும், அம்பலப்படுத்தப்படவேண்டியதுமாகும்.

குறிப்பாக பெண்களை இழிவுபடுத்துவதில் எந்தமதமும் ஒன்றுக்கொன்று சளைத்தது கிடையாது. விண்ணை முட்டும் கோபுரத்தைப் படைக்கும் உழைப்பாளி மக்களுக்கு அதன் நிழலில் கூட சற்று இளைப்பாற அனுமதி வழங்கப்படுவதில்லை இந்துமதத்தில். இந்த இழிநிலையைவிட எந்தவிதத்திலும் குறைந்தது இல்லை, பெண்களை பள்ளிவாசல்களுக்கு வெளியில் நிறுத்தும் இசுலாத்தின் ‘மநுதர்மம்’.

இன்னும் பர்தா போன்ற கருப்புத் திரைக்குள் சிறையிருக்கும் இசுலாமியப் பெண்களின்மீது அந்த மதம் பொழியும் வெறுப்புக்கு, அவலத்திற்கு வேறென்ன சாட்சியம் வேண்டும். இசுலாத்தின் பெண்ணடிமைத்தனம் குறித்து எழுதப் போனால் அதற்கென்றே பல்வேறு தனிப்பட்ட தலைப்புகளில் நாம் விவாதிக்கலாம். அந்தகையதொரு இழிநிலையும் அவலமும் அம்மதத்தில் மண்டிக்கிடக்கிறது. இதுகுறித்த விமர்சனங்கள் எண்ணற்றவையாக இன்னும் இங்கே இருக்கின்றன. தஸ்லீமா நஸ்ரீன் முதல் நம்முடைய தமிழகத்து சல்மா வரை, இதுவரை யார்வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் இசுலாமிய புகழ்பாடும் ஒருவரும் நேர்மையாக பதிலளித்தது கிடையாது மாறாக இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள், இப்படிப்பட்ட அயோக்கியத்தனங்களை விமர்சிப்பவர்கள் கடுமையாக தாக்கப்பட்டும் இருக்கின்றனர்.

நம்முடைய அன்மைநாடான பாகிஸ்தான் முதல் பல்வேறு இசுலாமிய நாடுகளில் ‘அல்லாஹ்’ என்பவனைப் பற்றி கேள்வியெழுப்புகிறவர்களுக்கு மரணதண்டனை வழங்கும் சட்டம் இன்னும் இருக்கிறது. கேட்டால், “இசுலாம் கண்மூடித்தனமாக நம்பி வழிபடுவதற்கான மதம் அல்ல, அது ஒரு மார்க்கம் மட்டுமே” என்று பொழிப்புரை கூறும் இசுலாமிய அறிஞர்களும் இங்கிருக்கத்தான் செய்கின்றனர்.

பல்வேறு விமர்சணங்களிலும் எண்ணற்ற ஆய்வுகளையும் சந்தித்துத்தான் வளர்ந்து நிற்கிறது அறிவியலும் அது இச்சமூகத்துக்கு ஈந்த கண்டுபிடிப்புகளும். ஆனால், தன்னை நோக்கி எழுப்பப்படும் ஒற்றைக் கேள்விக்கு மரணத்தை பதிலாகத் தருகின்ற அயோக்கியத்தனத்தை சட்டமாக்கிக் கொண்டிருக்கிறது இம்மதம். அறிவியலை ஏற்பதாகச் சொல்லிக்கொண்டு அறிவியலின் அடிப்படையான விமர்சணங்களையும் ஆய்வுமுறைகளையும் அடியோடு புறக்கணிக்கின்றன அனைத்து மதங்களும். எனவேதான் அறிவியலுக்கும் இதுபோன்ற மதவாத மூடநம்பிக்கைகளுக்கும், மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம் இருக்கின்றது.

எந்த மதமும் தன்னைச் சார்ந்துள்ள அப்பாவி உழைக்கும் மக்களின் இன்னல்களுக்குத் தீர்வு சொல்வதில்லை. எந்த மதமும் தான் சார்ந்துள்ள சுரண்டல் – ஆதிக்க வர்க்க சேவையில் விலகிநின்றதில்லை. இங்கே எண்ணற்ற இசுலாமிய மக்கள் இந்து-இசுலாமிய வெறி நடவடிக்கைகளின் மூலம் கொடுமையில் உழன்று கொண்டிருக்கும் போது, அவர்களின் இந்நிலைக்கு ஒரு தீர்வு சொல்லாமல் இசுலாமியப் பெருமைகளைப் பற்றி பேசுவது கேவலமானதாகும். இது, ஊரே தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் வேளையில் அதில் சென்று பீடியைப் பற்ற வைத்து இழுப்பதற்கு சமமானது.

அதேபோல இந்துமதவெறி பயங்கரவாதிகள் இசுலாத்தின் மீது வைக்கும் கேள்விகள் இப்படிப்பட்ட பொதுவான கண்ணோட்டத்திலிருந்து எழுவது கிடையாது. அவர்களின் விமர்சணங்கள் எல்லாவற்றையும் விடக் கீழானதாகும். “பொது சிவில் சட்டத்தின் மூலம் பல பொண்டாட்டி கட்டும் உரிமையை இசுலாமியருக்கு மறுக்க வேண்டும். அந்த ‘வாய்ப்பு’ இந்துமதம் உள்ளிட்ட வேறெந்த மதத்திலும் வழங்கப்படுவதில்லை” என்று குமுறும் பார்ப்பனீய-இந்துவெறி அத்துவானி வகையாறக்கள் ‘வயிற்றெரிச்சலோடு’ கூப்பாடு போடுகின்றனர். குழந்தை பெற்றுக்கொள்வதிலும் இசுலாமியர்களுக்கு எந்தத் தடையும் சட்டரீதியாக இல்லை என்று ஒப்பாறி வைக்கின்றனர் அவர்கள். “இப்படி பலதாரங்களை வைத்து பலபிள்ளைகளைப் பெற்று மக்கள் தொகையில் தங்களது எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே போகிறார்கள் முசுலீம்கள். இதனைக் கண்டிப்பது எப்படி தவறாகும்” என்று கேட்கிறார் ஒரு அம்பி. இதை உடனடியாகத் தடுக்காமல் விட்டால், இங்கே இந்துக்களின் எண்ணிக்கையைவிட இசுலாமியர்களின் எண்ணிக்கை கூடிவிடுமே என்பது அவரது கவலையாம். இதுபோன்ற அருவெறுப்பான அற்பர்களின் விமர்சனங்களின் போக்கிலேயே பெரும்பாலும் இங்கே இசுலாத்துக்கு எதிராக விமர்சனங்கள் பதியப்படுவதாக அறிகிறேன். இதுபோன்ற இசுலாமிய அற்பவாதங்களைவிட பலமடங்கு ஆபத்தானது இந்துவெறி பயங்கரவாதம். அதைப்பற்றி நாம் விவாதிக்கக் கோரினால் நேரமையாக வாதிட வக்கற்ற பலரும் இங்கே வரிந்துகட்டிக் கொண்டு நிற்பது வேடிக்கையாக இருக்கிறது.

பார்ப்பனீய-இந்துமதத் தீண்டாமை இழிவுகள் குறித்து இங்கே நாம் வைத்த எந்தக் கேள்விக்கும் இந்துமதவெறியர்களோ அல்லது இசுலாத்தை நாம் விமர்சிக்க வேண்டும் என்று கோருபவர்களோ பதில் சொன்னதே கிடையாது. இங்கே இசுலாம் விமர்சிக்கப் பட்டிருக்கும் வேளையில் பல்வேறு கருத்துக்களை வைத்து வாதிட்டுவரும் நண்பர்.ஜாய் போன்றவர்கள் திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டவனின் வாயில் ‘பீ’ திணிக்கப்பட்டது குறித்து நாம் எழுதியபோது, நமக்கு எதிராக எழுதியவர்கள்தான் என்பதையும் நாம் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. “அது பகுத்தறிவா?”, “இது பகுத்தறிவா?” என்றெல்லாம் பார்ப்பனீயத்துக்கு எதிராக நாம் விவாதித்துக் கொண்டிருக்கையில் ‘பகுத்தறிவு’க் கேள்வியெழுப்பி இந்துவெறியர்களின் ‘ஆபத்பாந்தர்களாக’ அவதரித்து எழுதிய நண்பர்கள், இங்கே இசுலாத்தை அத்துவானிகளின் கேள்விகளைக் கொண்டு விமர்சித்து எழுதிவருவது அவர்களின் நிஜமுகத்தை இங்கே அம்பலப்படுத்துகிறது. தான் சார்ந்த மதத்தின் வெறியை நியாயப்படுத்துகின்ற எவருக்கும் பிறமதத்தைக் கேள்வி கேட்கும் தகுதி மட்டும் எப்படி இருக்க முடியும்? இந்துமதத்தின் அயோக்கியத்தனங்களை கண்டிக்கத் திராணியற்றதோடு ஆதரித்து எழுதுவதும், அதனைக் கண்டிக்கின்ற நம்மை இழிவாகப் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர்கள் இசுலாத்தைக் கண்டித்து துள்ளாட்டம் போடுவதில்தான் இவர்களது மதச்சார்பின்மைக் கோவனம் அவிழ்ந்து விழுந்துகிடக்கிறது.

இசுலாத்தைப் பற்றி பார்ப்பனீயவாதிகள் விமர்சிப்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும். இதுபோன்ற ‘பகுத்தறிவுக்கு பொழிப்புரை எழுதும்’ அற்பர்களின் ஒருசார்பான விமர்சனங்களை என்ன சொல்வது? நமக்கு அற்பத்தனங்களை விமர்சிப்பதற்கு நேரமில்லை. அதைவிட அதிகமாக சாதீய-தீண்டாமை இழிவுகளை இங்கே நிலைத்திருக்கப் போராடிவரும் இந்துவெறிக்கும், அது குடைபிடித்து நிற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராகப் போராடவேண்டிய / எழுதவேண்டிய மாபெரும் பணி நம்முன் நிற்கும் போது இசுலாத்தின் அற்பவாதம் குறித்து எழுத நேரமில்லை. போராடுவோம்.

தோழமையுடன்,
இரணியன்.
http://eraniyann.blogspot.com

No comments: